அன்பே சிவம்

0
3556

சைவத்தமிழ்ச் சங்கம் தனது ஆரம்பகாலம்முதல் தாயகத்தில் அல்லலுறும் மக்களின் துயரைப் போக்குமுகமாக பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை நேரடியாகவும், குறியீட்டுப் பெயருடனும் மேற்கொண்டுவந்தது தாங்கள் அனைவரும் அறிந்ததே.

யேர்மனியை மையமாகக்கொண்டு இயங்கிய நேசக்கரம் என்ற அமைப்பின் தொடர்பு சிவனாலய தொண்டரிற்கு கிடைக்கப்பெற்றதனைத் தொடர்ந்து அவர்களது செயற்பாடுகள்சார்ந்து ஆராய்ந்து உரியவர்களிடம் அனுமதிபெற்று சிவனாலயத்தினால் 20 பள்ளி மாணவர்களின் தாய்மொழிக் கல்விக்கு மாதாந்தம் தொடர்ச்சியாக உதவியளிப்பதாக ஆலய பக்தர்களினால் முடிவெடுக்கப்பட்டது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து மணற்காட்டு முகாமில் தங்கியிருந்த 210 குடும்பங்களைச் சேர்ந்த 680 மக்களில் 60 பள்ளிமாணவர்கள் இருந்தமையினால் அவர்களில் 20 மாணவர்களை தெரிவுசெய்யுமிடத்தில் ஏனைய மாணவர்களுக்கு மனவேதனை ஏற்படும் என்ற கருத்தின் அடிப்படையில் 60 மாணவர்களுக்கும் சிவனாலயம் உதவியளிப்பதாகவும் இத்திட்டத்திற்காக மாதாந்தம் 1000.- சுவிஸ்பிராங்குகள் வழங்குவதாகவும் முடிவெடுக்கப்பட்டது. இப்பணத்தில் ஒவ்வொரு மாணவரிற்கும் தலா 1000.00 இலங்கை ரூபா கல்வி ஊக்குவிப்பிற்காக வழங்குவதுடன் மிகுதிப் பணத்தில் அம்முகாமிலுள்ள பாலகரிற்கு பால்மா, சத்துணவுகள் வழங்குவதெனவும், இவ்வேலைத்திட்டத்தினை ‘மண்சுமந்தமேனியர்’ என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்வது எனவும் ஆலய நிர்வாகம் முடிவெடுத்தது.

20.03.2010அன்று மணற்காட்டு முகாமில் அம்மாணவர்களுக்கான முதலாவது மாதாந்த கல்வி ஊக்குவிப்புக் கொடுப்பனவும், பாலகருக்கான சத்துணவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு சக்கோட்டை கத்தோலிக்கக் கலவன் பாடசாலை அதிபர் திரு. ராஜாதுரை, நேசக்கரம் அமைப்பினைச் சேர்ந்த திருமதி. கமலாதேவி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. உதவியினைப் பெற்றுக்கொண்ட மாணவர்களும், பெற்றோர்களும் சைவத் தமிழ்ச் சங்கத்திற்கு தங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்தார்கள். இவ்வாறான உதவியினை சைவத் தமிழ்ச் சங்கம்; ஆடி 2010 வரை மேற்கொண்டதுடன், ஆலயத் தொண்டர்களும் நேரடியாக முகாமிற்குச் சென்று உதவிபெறும் மாணவர்களை பார்வையிட்டு, ஆறுதல்கூறி வந்தார்கள். சைவத் தமிழ்ச் சங்கத்தினால் மணற்காட்டுமுகாமில் மேற்கொண்ட வேலைத்திட்டங்களை அம்முகாமில் வாழ்ந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர் ஒருவர் ஒருங்கிணைத்து நடாத்தித் தந்திருந்தார்.

17.06.2010 அன்று சிவனாலயத்தின் கொடியேற்றத் திருவிழாவின்போதும், 26.06.2010 தேர்த் திருவிழாவின்போதும் சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கும் அதேநேரம் மணற்காட்டு முகாம் மக்களுக்கும் அன்னதானம் வழங்குவது சிறப்பானது என்ற தொண்டர்களின் கருத்தின் அடிப்படையில் முகாமிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்றிலிருந்து சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன்கோவிலினால் மேற்கொள்ளப்பட்ட ‘மண்சுமந்தமேனியர்’ வேலைத்திட்டம் விரிவாக்கம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here