திருமுறிகண்டி, இந்துபுரம் சிவன்கோயிலில்.

0
2536

புரட்டாதி 20, 2048 வெள்ளி (06.10.2017) மாலை 1700 மணி

கிறித்தவ ஆக்கிரமிப்பின் கோரமுகம்.
திருமுறிகண்டி, இந்துபுரம் சிவன்கோயிலில்.

ஆண்டாண்டு காலமாகக் காலாதி காலமாகக் வடக்கிலிருந்து கண்டி செல்லும் பயணிகள் வரலாற்றினூடாக வழிபட்ட சிவன்கோயில்.1940களில் கண்டி நெடுஞ்சாலையைத் திருத்தும் பணியில் இருந்த சிவனடியார்கள், பாழடைந்த சிவலிங்கக் கட்டடத்தைக் காண்கின்றனர். அச் சிவலிங்கத்தை வழிபட மீளமைக்கின்றனர்.

1979களில் அங்கு குடியேறிய சைவர்கள், முன்பு உடைந்த சிவலிங்கத்தைக்குப் பதிலாகப் புதிய சிவலிங்கத்தை அமைக்கின்றனர்.

சிவனடியார் வீரசிங்கம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆசிரிய கலாசாலை ஆங்கிலப் பேராசிரியர். என் தந்தையாருக்கு அருமை நண்பர். அவர் எழுதிய ஆங்கிலப் பயிற்சி நூல் ஒன்றை என் தந்தையார் பதிப்பித்தவர். பேரா. வீரசிங்கம் தந்தை செல்வாவுக்குத் தோளோடு தோள் நின்று தமிழரசுக் கட்சியை வளர்த்தவர்.

அவருக்கு மகன் ஞானசங்கரி. சிவனடியார். இல்லத்துடன் திருமுறிகண்டியில் குடியேறுகிறார். அக்காலத்தில் அரசு நிலங்களை ஒதுக்குகிறது. 100ஆம் எண் காணி ஞானசங்கரியாருக்கு. அருகே இருந்த பண்டைய வரலாற்று வழிபாட்டுக்குரிய சிவன் கோயிலுக்கு 99ஆம் எண் காணி.

வீரசிங்கத்தார் மரபில் மகன் ஞானசங்கரியார் சிவன்கோயிலில் வழிபடுகிறார். தொண்டு செய்கிறார்.
அறங்காவலர் சபையாருடன் இணைந்து பராமரிக்கிறார். 23.01.1989இல் இந்து சமயக் கலாச்சார திணைக்களத்தில் எச்ஏ/5/எம்யூ/53 எண்ணுடன் சிவன்கோயிலைப் பதிவுசெய்கின்றனர். ஞானசங்கரியாரின் அருமைத் துணைவியார் அறங்காவலர் சபையாரிடம் 99ஆம் எண் காணியையும் கோயிலையும் 24.03.1989 நாளிட்ட கடிதத்தில் வீரப்பன், கன்னையா, செயரத்தினம் சாட்சியாகக் கையளித்து ஒப்பமிடுகிறார்.

அறங்காவலர் சபையார் கோயிலுக்கு மண்டபம் கட்டினர். தீர்த்தக் கிணற்றைப் புதுப்பித்தனர். பூசகரை அமரத்தினர். சிறப்பான வழிபாடு, தீமிதி, திருவிழா, தீர்த்தக் கிணற்றில் தீர்த்தமாடுதல் எனச் சிவநெறி பொலிந்த காலங்களை அன்றைய பூசகர் இன்றும் நினைவு கூர்கிறார்.

போரின் கொடுமை. புலம் பெயர்தல். மீண்டும் சிவன் கோயில் பாழடைகிறது.

2010இல் மீண்ட ஆலய அறங்காவலர் சபையார் மீண்டனர். படையினர் கோலோச்சிய காலம். முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் வட்டம், இந்துபுரம் கிராம அலுவலர் பிரிவு. 24.11.2010இல் ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலர் 0.302 எக்டேர் பரப்பளவுள்ள 99ஆம் எண் காணி சிவன் கோயிலுக்கே உரியது என அறங்காவலர் சபையாருக்கு எழுதிய கடிதத்தில் உறுதிசெய்கிறார்.

ஞானசங்கரியாரின் மகன் சப்தசங்கரி கிறித்தவரானார். 99ஆம் எண் காணிக்குள் அத்துமீறிக் கொட்டில் அமைத்து வாழத் தொடங்கினார். படையினர் கோலோச்சிய காலத்தில் இந்த அத்துமீறல் நடந்தது. சிவனடியார் அச்சத்துடன் வாழ்ந்த காலங்கள்.

அறங்காவலர் சபையார் காவல் நிலையத்துக்கும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலருக்கும் அறிவித்தனர். 26.02.2013 கடிதத்தில் 99ஆம் எண் காணி சிவன்கோயிலுக்குரியது எனப் பிரதேச செயலகம் உறுதிக் கடிதம் அனுப்புகிறது.

15.03.2017க்குமுன் ஞா. சப்தசங்கரி காணியை விட்டு வெளியேறவேண்டும் எனக் காலக்கெடு கொடுத்த பிரதேசச் செயலர் தவறினால் சட்ட நடவடிக்கை எனவும் அவரது 01.02.2017இல் சப்தசங்கரியாருக்கு எழுதிய கடிதத்தில் கூறுகிறார்.

14.06.2017இல் வடமாகாண முதலமைச்சர் அலுவலகம், 19.06.2017இல் வடமாகாண ஆளுநர் அலுவலகம் இரண்டும், முல்லைத்தீவு மாவட்டச் செயலருக்கு எழுதிய கடிதங்களில், அத்துமீறிக் குடியேறி, அனுமதியின்றிக் கட்டடம் அமைப்பவரை வெளியேற்றி, சைவச் சூழல் பொலியுமாறமைய ஏற்பாடு செய்யுமாறு எழுதுகின்றனர்.

04.09.2017 சிவன்கோயில் மீளமைத்த திருக்குட நன்னீராட்டு விழா. கருவாடு பொரித்துக் கழுவிய நீரை வழிபட்ட அடியார் மீது வேலிக்கு மோலால் வீசினர். மந்திரங்கள் முழங்கிய அதே நேரத்தில் ஒலிபெருக்கி அமைத்து கிறித்தவப் பாடல்களை ஒலித்து மந்திர ஒலியை மழுங்கடித்தனர். மூலவர் கருவறைக்கு அருகில் கழிவுக் குழி அமைத்துளர். தீர்த்தக் கிணற்றைத் தம்வசமாக்கினர். பிரதேச சபை உரிமமின்றி வழிமறித்து மதில் கட்டினர்.

அறங்காவலர் சபையார் மாங்குளம் காவல் நிலையத்தில் இந்தக் கொடுமைகள் அனைத்தையும் அவ்வப்போது முறையிட்டு்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் எனக்குக் கடிதம் எழுதினர். நேரிலும் 26.9 அன்று வந்து கண்டனர்.

நேற்று அங்கு போனேன். 5000 ஆண்டு காலத்தூக்கூடாக, வடக்கிலிருந்து கண்டி செல்லும் பயணிகள் வழிபட்ட சிவன் கோயிலில் வழிபடும் பேறுற்றேன்.

சின்மயா மிசன் தவத்திரு சுவாமிகள் வந்திருந்தார்கள். வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை வந்திருந்தார். அடியார்கள் பெருங்கூட்டமாகக் கூடியிருந்தனர்.

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here