மகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா ! 2018

0
5438

மகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா !

சுவிற்சர்லாந்தில் தமிழ் மக்களின் மூன்று தசாப்த காலப் புலம் பெயர்வாழ்வில், மகத்தான திருநாளாக அமைந்தது, பேர்ன் மாநகரில், சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா நிகழ்வுகள் நடைபெற்ற இன்றைய (04.11.2018) ஞாயிறு. சுவிற்சர்லாந்திலுள்ள 23 இந்து சைவத் திருக் கோவில்கள் இணைந்துள்ள, இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் நடாத்திய இப் பெருவிழா காலை 10.45 மணிக்கு Freiburgstrasse 100, 3150 Schwarzenburg/BE எனும் முகவரியில் கோலகலமாக ஆரம்பமாகிய இப் பெருவிழாவில், மூவேந்தர் கொடி அம்பும் வில்லும், புலியும், மீனும் அசைந்தாட, சிறப்பழைப்பாளர்கள், பல் சமயத் தலைவர்கள், அந்தணப் பெருமக்கள், செந்தமிழ் அருட்சுனைஞர்கள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் சூழ்ந்து வர, மங்கல வாத்திய சகிதம் , சமயகுரவர் நால்வரது திருவுருங்கள், மண்டபத்திற்கு எழுந்தருளிதோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து, தேவாரத் திருமுறையும், திருக்குறளும், சிறார்கள் ஒதிநிற்க, பல்சமயங்களின் தலைவர்களும், சிறப்பழைப்பாளர்களும், மங்கல விளக்கேற்றி, நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள். தொடர்ந்து உலகில் வன்முறையாலும், போர்களாலும், உயிரிழந்த அனைத்து உயிர்களுக்கும், எமது தாயகத்தில், போரினால் உயிர் இழந்த அனைத்து உயிர்களுக்குமான நினைவு அகவணக்க மரியாதை இடம்பெற்றது.

சிறப்பழைப்பாளர்களும், மதத்ததலைவர்களும், பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கலவாத்திய இசையும், வரவேற்பு நடனமும் இடம்பெற்றன. ஒன்றியச் செயலர் திரு. சின்னராசா இராதாகிருஷ்ணனின் தமிழ்மொழியிலான வரவேற்புரை, உறுப்பினர், திரு. செல்லையா தர்ணனின் ஜேர்மன் மொழியிலான வரவேற்புரையைத் தொடர்ந்து, சிறப்பழைப்பாளர்களினதும், மதகுருமார்களினதும், வாழ்த்துரைகள் இடம்பெற்றன. சுவிற்சர்லாந்தின் தமிழ் கல்விச் சேவைப் பொறுப்பாளர் திரு. பார்த்திபன் அவர்கள் நிகழ்வில் கலந்து வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார். ஒன்றியத்தின் தலைவர் சிவருசி. தர்மலிங்கம் சசிகுமார் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து , ஒன்றியத்தின் தோற்றம், மற்றும் நோக்கம் குறித்து தெளிவுரையாற்றினார்.

மதிய போசன இடைவேளையைத் தொடர்ந்து இனிமையான வீணை, மற்றும் இன்னிசையுடன் பிற்பகல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிழ்வுகளின் சிறப்பாக, ஒன்றிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்ட கருத்தாய்வு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில், அடுத்து வரும் பத்தாண்டு காலத்தில் இந்து ஆலயங்களின் செயல்நிலை எவ்வாறிருக்கும் எனும் நோக்கில் நடைபெற்ற இக்கருத்தாய்வு நிகழ்வினை, திரு சிவகீர்த்தி அவர்கள் நெறியாள்கை செய்தார். பார்வையாளர் பலரையும் கவனமீர்த்த நிகழ்வாக இது அமைந்திருந்தது.

ஒன்றியத்தின் உபதலைவர் சிவஶ்ரீ. நா. கஜேந்திரக்குருக்கள் சிறப்புரை ஆற்றுகையில், சுவிற்சர்லாந்தில் இயங்கும் இந்து சைவத் திருக்கோவில்கள் ஒன்றிணைய வேண்டியதன் அவசித்தினையும், தேவையினையும், வலியுறுத்தி, அதற்கான துவக்கமாகவும், தொடராகவும் இந் நிகழ்வு அமைந்திருப்பதாகவும், நமது தனித்துவங்களைப் பேணவும், இளைய தலைமுறையினரை, ஆன்மீக வழியில் ஈடுபாடு கொள்ளச் செய்யவும், எண்ணற்ற பணிகளும், தேவைகளும், இருப்பதாகவும், அவற்றை அனைவரும் ஒன்றாக இருந்து பேசவும், சிந்திக்கவும், செயலாக்கவும், தேவையானவற்றைப் பகிர்ந்து கொள்வதற்குமான ஒரு பொதுத் தளமாக சுவிஸ் இந்து சைவத் திருக்கோவில்களின் ஒன்றியம் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வுகளை மேலும் சிறப்புச் சேர்க்க சுவிற்சர்லாந்தின் பல்வேறு நடன ஆசிரிகைகளின் மாணவிகள், நடன ஆற்றுகைகளை வழங்கியிருந்தார்கள்.

ஒன்றியத்தின் உறுப்பினர்கள், திரு. விக்கி, திரு. சபாரஞ்சன் ஆகியோர் நேர்த்தியான தொகுப்பினால், நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்தார்கள்.

சிவன் தொலைக்காட்சி, முருகன் தொலைக்காட்சி ஆகியன விழாநிகழ்வுகளை நேரலை செய்தன.
பெருமளவிலான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்த, சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா, இணைவினாலான மகிழ்ச்சியையும், செயலாற்றலுக்கான நம்பிக்கையினையும், அனைவருக்கும் தந்த பெருமையுடன் மன்ற உறுப்பினர் திரு சண்முகலிங்கம் அவர்களின் நன்றியுரையுடன் குறித்த நேரத்தில் மாலை 16.20 மணிக்கு நிறைவு கண்டது.

ஒவ்வொரு கோவிலுக்கும் அதன் மன்றங்களுக்கும் ஒரு தனியான வரலாறு, பின்னணி, தனித்துவம், கொள்கை உண்டு. ஈழத்தமிழர்களால் அறங்காவல் செய்யப்படும் கோவில்கள் எனும் போது அதன்பால் ஒரு ஒற்றுமையும் ஏற்படுகிறது. இவ்வொற்றுமை வேற்றுமைகளைக் கடந்து ஒரு பொது இணக்கம் காண வழியாகவும் உள்ளது. ஒவ்வொரு கோவிலும் கடந்துவந்த பாதை தனித்தனியானதாக இருப்பினும் எதிர்காலத்தில் எமது தமிழ்ச் சமூகத்திற்கு அளிக்கப்போகும் அறிவுச்சொத்து பொதுவானது ஆகும்.

எதிர்வரும் காலங்களில் வலுவான சமூகப்பங்களிப்பினை சுவிற்சர்லாந்தில் ஆற்றுவதற்கும், சுவிற்சர்லாந்து ஊராட்சி, மாநில நடுவன் அரசுகளின் நடுவில் இந்து- சைவத்தமிழ் மக்களின் தேவைகளை எடுத்து விளக்கி உரிய உரிமையினை பெற்றுக்கொடுக்கவும் உழைக்கும் எனும் நம்பிக்கையினை இந்நிகழ்வு ஏற்படுத்தியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here