images1
 • கடவுள்

  கடவுள் ஏன் புலப்படுவதற்கு அரிய ஒன்றாக இருக்கிறார்?
  அன்பே சிவம். அன்பெனப்படுவது மூன்று தன்மைகளைத் தன்னுள் அடக்கியிருக்கும்.

  1. தன்னை முன்னிலைப்படுத்தாமை
  2. தொடர்ச்சி
  3. துணிச்சல்

  என்னிடத்தில் தன்னுடைய துன்பத்தை எடுத்துக் கூறிய ஒருவருக்கு நான் 100 ரூபாய் கொடுக்க விரும்பினேன். அதை என்னுடைய நண்பனிடம் கொடுத்து கொடுக்கச் சொன்னேன். “நான் அவரைக் கூப்பிடுகிறேன். நீங்களே கொடுங்கள்” என்றான் நண்பன். “வேண்டாம் நீயே கொடுத்து விடு” என்றேன். “நீங்கள் கொடுத்ததாகச் சொல்லிக் கொடுக்கட்டுமா” என்றான். வேண்டாம் நீ கொடுப்பதாகவே கொடுத்து விடு” என்றேன்.
  ஏனென்றால் அந்த 100 ரூபாயை நான்தான் கொடுத்தேன் என்பதை வெளிப்படுத்தி, அதன் மூலம் பெருமை தேடுவதோ அல்லது எதிர்காலத்தில் அவரால் ஏதும் பயன் பெறலாம் என்ற எண்ணமோ; நன்றி எனும் விலங்கிட்டு அவரை அடிமைப்படுத்துவதோ என்னுடைய நோக்கம் இல்லை.
  இதுபோலத்தான் இறைவனும் கேட்டதை எல்லாம் கொடுக்கிறான். அதே சமயம் கொடுப்பவன் தான் என்பதை வெளிப்படுத்தாமல் மறைந்தே இருக்கிறான். எவன் ஒருவன் அவனைக் கண விரும்புகிறானோ அவனிடம் மட்டுமே தன்னை வெளிப்படுத்துகிறான்.
  இதனால்தான் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சிவபெருமானைப் பற்றிக் கூறுகையில், “புறத்தார்க்குச் சேயோன்” எனவும், “தன் பெருமை தானறியாத் தன்மையான்” எனவும் பாடியுள்ளார்.
  எப்போதும் நம்மோடு இருந்துகொண்டேயிருக்கும் ஒன்றை நாமறிவது கடினம். வயிறு எனும் ஒன்று நம்மோடு இருப்பதை நாம் எப்போது அறிகிறோம். பசி அல்லது வலி வந்தால்தான் வயிறு என்று ஒன்று இருப்பது நமக்குத் தெரிய வருகிறது.
  இதேபோல இறைவனும் எப்போதும் நம்முடன் இருந்துகொண்டே இருக்கிறான். ஆன்மா தோன்றியது முதல் தொடர்ந்து அதனோடிருந்து அதைக் காப்பாற்றிக் கொண்டேயிருக்கிறான் இறைவன். எவ்வாறெனில் புதிதாக நடக்கப் பழகும் குழந்தை விழுந்துவிடாமல் இருபுறமும் தன் கைகளை குழந்தைமேல் படாமல் பிடித்தவாறு பின்னே செல்லும் தாயைப்போல் தானே நடப்பதாகக் குழந்தை நினைத்து நடக்குமாறு நடக்கவிட்டுத் தவறினால் தாங்கிக் கொள்வதற்குத் தன் கரங்களைத் தயாராக வைத்தவாறு தாய் தன் குழந்தையைத் தொடர்ந்து காப்பது போலவே சிவபெருமானும் உயிர்களைக் காக்கிறார் என்பதைத் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் “புறம் புறம் திரிந்த செல்வனே சிவபெருமானே” எனச் சிறப்பித்துப் பாடியுள்ளார். எப்போதும் நம்முடனே இருக்கும் அந்தச் சிவம் வயிறு போல் துன்பத்தை அதாவது வலியை ஒருபோதும் ஏற்படுத்தாமல் எப்போதும் நலமே செய்வதால் நாம் அதை அறிவது அரிதாகிவிடுகிறது.
  மனம் எது போன்றது?
  மனம் என்பது ஒன்றைப் பற்றிக்கொள்ளும் அறிவுறுப்பு (Intellectual Organ) ஆகும். ஆயிரம் பொருள் இருக்கும் அரங்கத்தில் நம் கவனம் குறிப்பிட்ட ஒரு பொருள் மேல் செல்கிறது அல்லவா; அவ்வாறு கவனம் செல்லும் பொருளே நம் மனம் பற்றிக் கொண்ட பொருளாகும். ஒருவனுடைய கவனம் நல்லன மேல் சென்றால் அதுவே அவன் செய்த நல்வினைப் பயனாகும்; தீயன மேல் சென்றால் அதுவே அவன் செய்த தீவினைப் பயனாகும். நல்வினையும், தீவினையும் வேறெதுவுமல்ல. நம் மன விருப்பு வெறுப்பே ஆகும்.
  எங்கும் நிறைந்து விளங்கும் சிவம் மனதால் பற்றிக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. அதனால் அது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்கிறது. இதனாலே சிவம் என்பதைச் சிலர் பரவெளி என்றும் வெட்டவெளி என்றும் கூறுவர்.
  சைவ நீதி
  மனிதர்களைக் காப்பது பற்றியது மனு நீதி. எல்லா உயிர்களையும் காக்கும் ஜீவகாருண்யம் பற்றியது உயிர் நீதி. அண்டசராசரங்கள் முழுவதையும் காப்பது பற்றியது சைவநீதி.
  ஆழிப்பேரலை போன்ற இயற்கைச் சீற்றங்களால் அப்பாவி மனிதர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுவது எவ்வாறு நீதியாகும் எனப் பலரும் கேட்பதுண்டு.
  நம்முடைய நோயை குணப்படுத்தும்போது குடலின் ஒரு பகுதியையோ கருப்பையையோ அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுகிறோம். அவ்வாறு செய்யும்போது அந்த உறுப்புகளில் வாழும் பல நுண்ணுயிர்கள் இறந்துபோகின்றன.
  அதேபோலத்தான், பூமியைக் காப்பாற்றும் நீதியில் இறைவன் செயல்படும்போது இயற்கைச் சீற்றங்களும், பேரழிவுகளும் உண்டாகின்றன. இதேபோல் சூரியக் குடும்பத்தைக் காப்பதற்காக பூமி போன்ற கோள்களையும் அண்டங்களை எல்லாம் காப்பதற்காக சில சூரியக் குடும்பங்களையும் கூட அழிப்பதுண்டு.
  இவ்வாறு அண்டசராசரங்களையும் காக்கும் நடு நீதிமானாகவே சிவபெருமான் விளங்குகிறான். அவனுடைய நீதியே சைவ நீதி ஆகும்.
  அற்ப அறிவுள்ள மனிதர்கள் தாமே முதன்மையானவர் என்ற கர்வத்தில் தம்மைக் காப்பது மட்டுமே கடவுளின் கடன் என நினைந்து மேலே கூறியது போன்ற வினாக்களை எழுப்புகின்றனர்.
  மனிதன் தான் வளர்ச்சி அடைவதாகக் கூறிக் கொள்கிறான். ஆனால் அது மெய்யல்ல. வளர்ச்சி என்றால் எல்லா வளங்களும் வளர (பெருக) வேண்டும். ஆனால் மனிதனுடைய வளர்ச்சியில் பூமியில் உள்ள நிலத்தடி நீர் முதலான வளங்கள் யாவும் தீர்ந்து வருகின்றன. மனித வளமாவது வளர்ந்திருக்கிறதா என்றால் அதுவும் வளரவில்லை. மனித மனங்களில் மனக்கவலையும் உடலில் நோய்களும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
  அழகான பூமி எனும் வீடு கட்டி அதனுள் கடலும் குளமும் காடும் மலையும் விலங்குகளும் பறவைகளும் தாவரங்களும் படைத்து அங்கே வாடகை இல்லாமல் வாழ மனிதனைப் படைத்தான் இறைவன். அவன் மனிதனைப் படைத்த போது எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. எந்த வளத்தையும் இது உனக்கு, இது அவனுக்கு எனப் பங்கிட்டுக் கொடுக்கவில்லை; எந்த மண்ணையும் கோடிட்டுப் பிரிக்கவில்லை.
  மனிதனே அள்ளிக் கொண்டான் இது என்னுடையது; என்னுடையதை நீ எடுக்கக் கூடாது. உன்னுடையதை நான் எடுக்கமாட்டேன் என ஒழுக்க விதிகளை உருவாக்கினான். அவை சம்பிரதாயமாக, சாத்திரமாக, சட்டமாக வளர்ந்தது. மனிதன் வகுத்த நெறிகளைத் தாண்டும் மனிதனை இறைவன் குற்றவாளி என்றோ பாவி என்றோ தீர்ப்பிடுவதில்லை. ஒவ்வொரு மனிதனின் மனதிலும் உள்ள குற்ற உணர்வே அவனைத் தீர்ப்பிடுகிறது.
  இந்த உண்மை அறியாதவர்களே பாவிகளை இறைவன் இரட்சிக்கிறான் என்றும் நல்லோரை இறைவன் சோதிக்கிறான் என்றும் கூறுகின்றனர்.
  மனிதன் தன்னுடைய அறிவினால் அறியக்கூடியதை மட்டுமே ஏற்றுக்கொள்பவனாக இருக்கும் வரை அவனால் இறைவனை அடைய முடியாது.
  மனிதன் தன்னுடைய சிறுமையை உணர்வது மிக மிக அவசியம். உலகிலுள்ள எல்லா உயிரினங்களும் ஒன்றுக்கொன்று உணவாகியும், ஒன்று வாழ இன்னொன்று ஆதாரமாகியும் உணவுச் சங்கிலியாகவும், உறவுச் சங்கிலியாகவும் ஒன்றனுக்கு இன்னொன்று பயன்படுகின்றது. மனிதன் வாழ்வதற்கு தாவரங்கள், விலங்குகள் எல்லாம் தேவை. ஆனால் மனிதனால் எந்தவொரு உயிரினத்திற்கும் பயனில்லை. மனிதன் என்றொரு உயிரினம் இல்லாவிட்டால் இவ்வுலகில் வாழும் எல்லா உயிரினங்களும் மகிழ்ச்சியாக வாழும். பூமியின் தன் வளங்குன்றாமல் விளங்கும்.
  மனிதனைத் தவிர மற்ற விலங்குகள் நடப்பதால் அந்த வழியில் வளரும் புற்கள் இறப்பதில்லை. மனிதன் மிதிப்பதால் அத்தடத்தில் புல் பூண்டு முளைக்காமல் போய் பாதை உண்டாகிறது.
  இவை போன்ற சிறுமைகளை உணர்ந்து பூமி வளம் பெருக வாழ்வதே மேலென எண்ணும் மனப்போக்கு மனிதனிடம் வளரவேண்டும். வியாபாரப் போக்கு மனதைவிட்டு விலக வேண்டும். முக்திப் பேரின்பமே வாழ்வின் இலக்காக மாற வேண்டும்.
  எங்கும் நிறைந்த கடவுளுக்கு எப்படி ஓர் உருவம் வந்தது?
  தலைச் சுற்றும் வாந்தியும் வந்தால் ஓர் எலுமிச்சம் பழத்தை மணக்கிறோம்; மணந்ததும் நோய் குணமடைகிறது; எப்படி? மனக்குழப்பத்தில் இருக்கும்போது ஒரு பூங்காவுக்கு அல்லது கடற்கரைக்குச் செல்கிறோம்; மனம் இலேசாகிறது; எப்படி? சிலரைப் பார்த்து, பேசிப் பழகினால் மனம் பாரமாகிறது; வேறு சிலரைப் பார்த்து பேசிப் பழகினால் மனம் இலேசாகிறது; எப்படி? சிலதை நினைத்தால் இனிக்கிறது; வேறு சிலதை நினைத்தால் கொதிக்கிறது; எப்படி?
  நாம் ஒவ்வொன்றையும் அனுபவிப்பதன் மூலம் இன்பத்தையும், துன்பத்தையும் அடைகிறோம். இன்பத்தையும், துன்பத்தையும் சுற்றியுள்ள உறவும், உடலும் ஏற்படுத்தினாலும் அனுபவிப்பது எப்போதும் மனமாகவே உள்ளது. நாவால் உண்டாலும், கண்ணால் கண்டாலும், செவியால் கேட்டாலும் இனிமை மனதால்தான் அனுபவிக்கப்படுகிறது. மனம் அனுபவிக்கும் இன்பத்தினாலும் துன்பத்தினாலும் வினைகள் தீர ஆன்மா விடுதலை அடைகிறது என்பது சைவசித்தாந்தம். சிலவற்றை அனுபவிப்பதால் ஆன்மா விடுதலை அடைகிறது; வேறு சிலவற்றை அனுபவிப்பதால் ஆன்மா கட்டுண்டு போகிறது (அடிமைப்படுகிறது).
  ஆன்மா விடுதலை அடையக் காரணமான உருவைத் தன் உருவாக்கித் தந்ததே எருதேறி வரும் அம்மை அப்பர் வடிவமும், கூத்தப் பெருமான் வடிவமும் ஆகிய சிவபெருமானின் திருவுருவங்கள் ஆகும்.
  இதுபற்றிக் கூறுகையில் திருவாசகத்தில் மாணிக்கவாசகப் பெருமான் “ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ” எனப் பாடுகிறார்.
  காரணமும் விளைவும்
  காரணமும் விளைவும் பற்றிக் கூறுகையில் நாம் அது பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. எடுத்துக்காட்டாக “காகம் இருந்ததால் பனம் பழம் விழுந்தது” என்பதை எடுத்துக்கொள்வோம்.
  1. காகம் இருக்கும்போது பனம் பழம் விழுந்ததா
  2. பனம் பழம் விழும்போது காகம் இருந்ததா
  3. இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தனவா
  4. காகம் இருந்ததால் பனம் பழம் விழுந்ததா
  இந்த நான்கில் எதன் வழி நாம் சிந்தையைச் செலுத்துவது 1. காகம் இருக்கும் போதெல்லாம் பனம் பழம் விழுவதில்லை. 2. பனம் பழம் விழும்போதெல்லாம் காகம் இருப்பதில்லை இவ்வாறிருக்கையில் இந்த இரண்டையும் எவ்வாறு தொடர்புபடுத்துவது. எனவே காகம் இருந்ததால் பனம்பழம் விழுந்தது எனக் காரணம் கூறாமால் இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது எனக் கருதுவதே பொருத்தமாக இருக்கும்.
  காரணம் விளைவு (Cause and Effect) எனும் அடிப்படையில் அமைந்த அறிவியல் விதிகளின் பயன்பாடு எப்போதும் அதேபோல் செயல்பட்டாலும், குறிப்பிட்ட பண்பு நிலை (Inertia Frame) எனும் நிபந்தனைகயில் மட்டுமே செயல்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அறிவியல் என்பது இருப்புகள் பற்றிய கல்வியாக இல்லாமல் இருப்புகளால் உண்டாகும் விளைவுகள் பற்றிய கல்வியாகவே உள்ளது. (Science is the study of effects facts and not the study of facts or existences)இதனால்தான் விளைவுகளை மாற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயன்பாட்டால் எதிர் விளைவுகள் புவிச் சூழலில் உண்டாகின்றன. எதிர்விளைவுகள் முழுமையான அண்டசராசரம் தன்னைச் சமனிலையில் பேணுவதற்காக ஏற்படுத்தும் மாற்றம் ஆகும்.
  முழுமையால் ஏற்படுத்தப்படும் மாற்றம் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பலிதமாகும் பண்புநிலை நிபந்தனையை முழுமையாக மாற்றவும் செய்யலாம் இதன் மூலம் அறிவியல் கண்டுபிடிப்புகள் முழுதும் பயனற்றதாக போகும். எனவே கூர்த்த மதி உடையோர் அறிவியல் பயன்பாட்டை குறைக்கப் பாடுபடுவதன் மூலம் புவியைக் காக்க முன்வர வேண்டும்.
  ரோசாப்பூ தன் வாசனையை இழந்தது போல், டைனோசோர் முதலான பண்டைப் பெரு விலங்குகள் அழிந்தது போல் சூழலைக் கட்டுப்படுத்தும் புவியீர்ப்பு முதலான அறிவியல் விதிகளின் பயன்பாட்டு நிபந்தனைப் பண்புநிலையில் ஏற்படும் மாற்றத்தால் அறிவியல் கண்டுபிடிப்புகள் முற்றிலுமாக செயலிழந்து போக வாய்ப்புண்டு எனவே எந்திரத் திறனை நம்பி மனிதன் தன் திறனை இழந்தால் ஒருநாள் எந்தத் திறனும் இல்லாமல் நிற்கும் அவலநிலை மனிதனுக்கு உண்டாகலாம் என்பதை மறந்து விடக்கூடாது.
  http://vivekaanandan.blogspot.in/2014/01/blog-post_17.htmlமேலும் பார்க்க