வரலாறு
சைவத் தமிழ்ச் சங்கம்
அருள்மிகு சிவன் கோவில்
சூரிச் வாழ் சைவப் பெருமக்கள், குருமார்கள், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களின் ஒன்றுகூடல் 1994ம் ஆண்டு ஆவணி மாத நடுப்பகுதியில் Volkshaus மண்டபத்தில் நடைபெற்றது. இவ் ஒன்றுகூடலில் கீழ்க்குறிப்பிடப்பட்டவற்றை நோக்கமாகக் கொண்டு சைவத் தமிழ்ச் சங்கம் அமைப்பதென தீர்மானிக்கப்பட்டது.
அ. சூரிச் வாழ் சைவ மக்கள் தமது சைவ வழிபாட்டு முறையினைப் பின்பற்றி வழிபாடு ஆற்றவும், சைவத் தமிழ்ப் பண்பாட்டைப் பேணவும் வழிசமைத்தல்
ஆ. சிறுவர்கள் தமிழ் மொழி, சைவசமயத்தினை கற்பதற்கும் பின்பற்றுவதற்கும் தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளல்.
இ. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் தாயக மக்கள், சுவிஸ்வாழ் தமிழ் மக்களுக்கு உதவுதல்.
ஈ. இந்நாட்டு மக்களுக்கு சைவசமய வழிபாட்டு முறையினையும் எமது பண்பாட்டையும் எடுத்துக்கூறல்.
உ. இந்நோக்கத்தினை நிறைவேற்ற ஆரம்பிக்கும் சங்கத்திற்கான நிர்வாகம் சுவிஸ்வாழ் சைவசமய மக்களால் தெரிவுசெய்யப்படுதல்.
ஆரம்பம்: திருவள்ளுவர் ஆண்டு 2025, ஆவணித்திங்கள் 10ம் நாள் (26.08.1994) வெள்ளிக்கிழமை.
(சூரிச் Volkhaus மண்டபத்தில் தெய்வத் திருவுருவப் படங்களை வைத்து பூசை வழிபாடு ஆரம்பித்த நாள்)
நோக்கத்தை நிறைவேற்ற மேற்கொள்ளும் வேலைத் திட்டங்கள்:
அ. சிவன் ஆலயம்:
26.08.1994 அன்றுமுதல் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமைதோறும் வாடகைக்கு அமர்த்தப்படும் மண்டபத்தில் தெய்வத் திருவுருவப் படங்களை வைத்து பூசை வழிபாடுகள் நடைபெற்றது.
திருவள்ளுவர் ஆண்டு 2026,யுவ வருடம் தைத்திங்கள் முதலாம் நாள் (15.01.1995) தைப்பொங்கல் திருநாளன்று Wehntalerstrasse293, 8046 Zuerich எனும் முகவரியில் அலயத்திற்கென வாடகைக்கு பெற்றுக்கொண்ட மண்டபத்தில் தெய்வத் திருவுருவப் படங்கள் வைத்து பூசை வழிபாடுகள் ஆரம்பமாயிற்று.
மண்டபத்தில் தனிச் சந்நிதானங்கள் அமைக்கப்பெற்று ஆனித் திங்கள் 32ம் நாள் (16.07.1995) ஞாயிற்றுக்கிழமை திருக்குட நன்னீராட்டுவிழா நடைபெற்றது.
1996ம் ஆண்டுமுதல் ஆனி உத்தரத்தை தீர்த்தத் திருநாளாகக்கொண்டு ஆலயத்திற்குள் அலங்காரத் திருவிழா நடைபெற்றுவந்தது.
அடியார்களின் அதிகரித்த வருகையினால் ஏற்பட்ட நடைமுறைக் கடினங்கள் காரணமாக திருவள்ளுவர் ஆண்டு 2033, ஆனித் திங்கள் 31ம் நாள் (15.07.2002) அன்று Glattbrugg நகரில் Industriestrasse34, 8152 Glattbrugg எனும் முகவரியில் திருக்கோவிலுக்கென மீண்டும் வாடகைக்குப் பெற்றுக்கொண்ட மண்டபத்திற்கு சிவனாலய வழிபாடுகள் மாற்றலாகியது.
புதிய மண்டபத்தில் தனித்தனி சந்நிதானங்கள் அமைக்கப்பெற்று திருவள்ளுவர் ஆண்டு 2033, சித்திரபானு வருடம் ஆவணித் திங்கள் 23ம் நாள் (08.09.2002) ஞாயிற்றுக்கிழமை அன்று திருக்குட நன்னீராட்டுவிழா நடைபெற்றது.
திருவள்ளுவர் ஆண்டு 2035ம் ஆண்டு (2004) ஆனி உத்தரத்தைப் பட்சமாகக்கொண்டு முதற்தடவையாக கொடியேற்றப்பட்டு வருடாந்த பெருந்திருவிழா நடைபெற்றது.
திருவள்ளுவர் ஆண்டு 2036ம் ஆண்டு (2005) பெருந்திருவிழாவின்போது எம்பெருமான் முதற் தடவையாக வெளிவீதியில் சித்திரத்தேரில் வலம்வந்தார்.
சிவனருளால் அடியார்களின் பெரும் பங்களிப்பினாலும் சைவத் தமிழ்ச் சங்க தொண்டர்களின் பெருந்தொண்டினாலும் திருவள்ளுவர் ஆண்டு 2045இ தைத் திங்கள் 28ம் நாள் (10.02.2014) திங்கட்கிழமை திருக்கோவில் அமைந்துள்ள கட்டடம் கொள்வனவு செய்யப்பட்டது.
திருவள்ளுவர் ஆண்டு 2045இ வைகாசித் திங்கள் 25ம் நாள் (08.06.2014) ஞாயிற்றுக்கிழமை மீள்திருக்குட நன்னீராட்டுவிழா நடைபெற்றது.
தாயக் கனவுடன் சாவினைத் தழுவியோர் நினைவாலயம்:
2010ம் ஆண்டு சிவன் ஆலயத்திற்குள் தாயகக் கனவுடன் சாவினைத் தழுவியோரிற்கான நினைவாலயம் நிலையான சந்நிதியாக அமைக்கப்பெற்றுள்ளது.
ஆ .
1994ம் ஆண்டுமுதல் நடைபெற்றுவரும் கலைவாணி விழாவினை முன்னிட்டு மாணவர்களுக்கான திருமுறை, திருக்குறள் மனனப் போட்டிகளுடன் பேச்சுப்போட்டி, பூமாலை தொடுத்தல், திருக்கோலமிடல் போன்ற போட்டிகளும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.
1995ம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களுக்கு தாய்மொழி, சைவசமயப் பொதுப் பரீட்சை நடாத்தப்பட்டது. ஆசிரியர்கள், நிர்வாகிகளுடனான ஒன்றுகூடலை மேற்கொண்டு மாணவர்களுக்குரிய பொதுவான பாடத்திட்டத்தினை அறிமுகப்படுத்தி பாடநூல் தயாரித்து வெளியிடப்பட்டது. தொடர்ந்து சில வருடங்கள் பரீட்சையினை நடாத்திவந்ததன்மூலம் சுவிசில் தாய்மொழி கற்பித்தலுக்கு தனியான ஓர் நிர்வாகத்தின் தேவை உணரப்பட்டு கல்விச்சேவை என்ற தனி அமைப்பு உருவாக வழிசமைக்கப்பட்டது.
1994ம் ஆண்டு கலைவாணி விழாவிலன்று தனது சேவையினை ஆரம்பித்த கூத்தப்பிரான் புத்தகசாலை 2000ம் ஆண்டுவரை மாணவர்களுக்கான தாய்மொழி மற்றும் சைவசமய பாடநூல் அச்சிட்டு அவற்றின் விநியோகத்தினையும் மேற்கொண்டிருந்தது.
ஒவ்வோர் காலப்பகுதியிலும் திருக்கோவிலுக்கு வருகைதரும் ஆன்மீகப் பெரியவர்களின் கருத்துரைகள், பயிற்சி வகுப்புகள் இளையவர்களுக்கு தனியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இளம்தொண்டர் சபை:
சைவத் தமிழ்ச் சங்கம் ஆரம்பம்முதல் திருக்கோவிலுக்கு வருகைதரும் இளையவர்களுடன் தொடர்பினைப்பேணி அவர்களை சிவத்தொண்டில் இணைத்துக்கொள்வது வழமை. திருவள்ளுவர் ஆண்டு 2050, ஆனித்திங்கள் 22ம் நாள் (07.07.2019) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளையவர்களுக்கான ஒன்றுகூடலில் நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டு இளம் தொண்டர் சபை உருவாக்கம்பெற்றது.
இ.சைவத் தமிழ்ச் சங்கம் ஆரம்பித்த நாள்முதல் வருடந்தோறும் ஆலய பராமரிப்பில் மீதப்படுத்தும் நிதியினை தாயகத்தில் வறுமையில் வாழும் மக்களின் புனர்வாழ்விற்கும் வாழ்வாதாரத்திற்கும் வழங்கி வருகின்றோம்.
1995ம் ஆண்டுமுதல் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வில் நாடகப் போட்டியினையும் நடாத்தி நிகழ்வின்மூலம் கிடைக்கப்பெறும் நிதியினை தாயக மக்களின் துயர்துடைக்க வழங்கிவந்தோம்.
ஒவ்வொரு திருக்கோவிலும் ஒவ்வொரு பஞ்சாங்கத்தினை உபயோகிப்பதனால் மக்களுக்கு ஏற்படும் நடைமுறைக் கடினத்தினை நீக்கும் முகமாக 1996ம் ஆண்டு சுவிசிலுள்ள திருக்கோவில்கள் அனைத்தும் ஒன்றிணைந்து வாக்கிய பஞ்சாங்கத்தினை உபயோகித்து விரதநாட்களை அனுட்டிப்பதென முடிவெட்டப்பட்டது.
2009 ஆண்டுமுதல் அன்பேசிவம் என்னும் பெயரில் தாயக மக்களின் புனர்வாழ்வு, சுயதொழில் ஊக்குவிப்பு, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான ஊக்குவிப்பு, மாணவர்கள் – கற்பிணித்தாய்மார்கள் – மூதாளர்களுக்கு போசாக்கு உணவளிக்கும் செயற்பாட்டினையும் மேற்கொண்டு வருகின்றோம்.
2013ம் ஆண்டுமுதல் இயற்கை வளத்தினைப் பாதுகாக்க வரப்புயர மரநடுகைத்திட்டத்தினை தாயகத்தில் வருடந்தோறும் மேற்கொண்டு வருகின்றோம்.
2017ம் ஆண்டுமுதல் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வில் தாயக உணவுக் கண்காட்சியினையும் மேற்கொண்டு வருகின்றோம்.
தாயகத்தில் அன்பேசிவம் அறக்கட்டளையின் உதவியுடன் சிவபுரவாளகத் திருப்பணி மேற்கொண்டு வருகின்றோம்.
இயற்கை அனர்த்த அவசர உதவிப்பணி:
தாயகத்தில் ஏற்பட்ட சூறாவளி, புயல், சுனாமி, கடும் வரட்சி, மண்சரிவு, பெருவெள்ளம், கொறோனாத் தொற்றால் உழைப்பின்றி பாதிக்கப்பட்ட மக்கள் போன்றோரிற்கான அவசர உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
சூரிச்சில் கொறோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த மக்களுக்கு சமைத்த உணவு, உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைப்பதோடு இறைவழிபாட்டிற்கேற்ற ஒழுங்கினையும் மேற்கொண்டு இறைபிரசாதம் வீட்டிற்கு அனுப்பிவைத்து ஆற்றுப்படுத்தி வருகின்றோம்.
அந்திமகாலச் சோறு:
சூரிச் மாநிலத்தில் வாழ்ந்து சிவனடிசேரும் சைவ அன்பர்களின் இறுதிநாள் கிரிகைக்கு கேட்கப்படும் உதவிகள் வழங்கப்பட்டு அன்றையநாள் மதிய உணவும் வழங்கிவருகிறோம்.
சமகால அறிவியல் ஊடகங்களும் சைவத் தமிழ்ச் சங்கமும்:
திருவள்ளவர் ஆண்டு 2036, ஐப்பசித் திங்கள் 19ம் நாள் (05.11.2005) sivankovil.ch எனும் இணையம் மக்கள் பார்வைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
திருவள்ளுவர் ஆண்டு 2038, மாசித்திங்கள் 2ம் நாள் (14.02.2007) sivan fm. எனும் 24 மணிநேர இணைய வானொலி தனது சேவையினை ஆரம்பித்தது.
திருவள்ளுவர் ஆண்டு 2041, சித்திரைத் திங்கள் 1ம் நாள் (15.04.2010) தனது சேவையினை ஆரம்பித்த சிவன் தொலைக்காட்சி தற்போது 24மணிநேர ஆன்மீகத் தொலைக்காட்சியாக தனது சேவையினை வழங்கிவருகின்றது.
ஈ. பாடசாலையில் கல்விபயிலும் சுவிஸ் மாணவர்களுக்கான சைவசமய அறிமுக வகுப்பினை நடாத்தி வருகின்றோம்.
சூரிச்சிலுள்ள பல்சமயத்தவர்களுடன் இணைந்து செயலாற்றி வைசமயக் கருத்துக்களையும் எமது பண்பாடு, வரலாறு போன்றவற்றை விளக்கி வருகின்றோம்.
உ. வருடந்தோறும் ஆலயத்திற்கு வருகைதரும் அடியார்கள் அனைவரிற்கும் பொதுக்கூட்ட அழைப்பிதல் வழங்கப்பட்டு தைத்திருநாளன்று பொதுக்கூட்டம் நடைபெறும். பொதுக்கூட்டத்தில் வருடாந்தத கணக்கறிக்கை வெளியிடப்பட்டு புதிய நிர்வாகத் தெரிவும் நடைபெற்று வருகின்றது.
ஓம் நமசிவாய